search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் எண்ணிக்கை"

    எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களை இணைப்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 55 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.
    சென்னை:

    சென்னை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, விமான நிலையம் முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிவடைந்த பகுதிகளில் படிப்படியாக மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது.

    கடந்த மாதம் (மே) 24-ந் தேதி வரை, விமான நிலையம் - சின்னமலை இடையேயும், ஆலந்தூர்- நேரு பூங்கா இடையேயும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது தினமும் சராசரியாக 35 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி முதல் சின்னமலை - ஏ.ஜி. டி.எம்.எஸ். இடையேயும், நேருபூங்கா - சென்டிரல் இடையேயும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது விமான நிலையம் - ஏ.ஜி. டி.எம்.எஸ்., ஆலந்தூர் - சென்டிரல் இடையே மெட்ரோ ரெயில் சேவை நடைபெறுகிறது.

    மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக, கடந்த 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நாட்களில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மெட்ரோ ரெயில்களில் பயணித்து மகிழ்ந்தனர்.

    கடந்த மாதம் 29-ந் தேதியுடன் இலவச பயணம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய தினமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மெட்ரோ ரெயில் சேவை கோயம்பேடு, விமான நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் ஆகியவற்றை இணைப்பதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த 30-ந் தேதி மெட்ரோ ரெயில்களில் 55,640 பேரும், 31-ந் தேதி 54,540 பேரும் பயணம் செய்துள்ளனர். முன்பு சராசரியாக பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால், தற்போது 20 ஆயிரம் பயணிகள் அதிகரித்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. 
    ×